பத்ரகாளி என்பவள் உக்கிரத்தின் உச்ச வடிவம் என்பது அறிந்த ஒன்றே.சிவந்த கண்களும்,ஆக்ரோஷமான முகமும் மிரட்டும் தோற்றமும் காளிக்கு உரிய அம்சங்கள்.அப்படிப்பட்ட காளி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு துணிவு,வெற்றி,மங்களம் உள்பட சகல சௌபாகியத்தையும் அளிப்பவள் என்பது புராண நூல்களின் கூற்று. முன்பொரு சமயத்தில் தாருகன் என்றொரு அரக்கன் இருந்தான்.அவன் மக்களை மிகவும் கொடுமை செய்தான்.அவனது கொடுமை தாங்காது பக்தர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.உடனே ஈசன் தன் கழுத்தில் உள்ள விஷத்தை வலக்கையால் மெல்லத் தடவினார்.அப்படி தடவிய அடுத்த வினாடி அற்புதமான அழகுடனும்,தீட்சண்யமான பார்வையுடனும் காளிதேவி தோன்றினாள்.
தாருகனை அழித்து வா என்று ஈசன் கட்டளையிட காளி ஒரு பெரிய படையை உருவாக்கி தாருகனை அழிக்கப் புறப்பட்டாள்.தாருகனையும் அவனது படையினையும் துவம்சம் செய்து அழித்தாள்.நிசும்ப சூதனி,வரதான சொரூபிணி,யோகப் பிடாரி,தாண்டவக் காளி,சுகாசனக் காளி,எனப் பல பெயர்கள் இந்த காளிக்கு உண்டு.இன்முகத்துடன் பக்தர்களைக் காப்பதால் பத்ரகாளி என அழைக்கப்படுகிறாள்.இந்த பத்ரகாளி அம்மனுக்கு திருச்சியில் உள்ள அம்மன் நகரில் ஒரு கோயில் உள்ளது.ஆரம்பத்தில் ஒரு வாழைத் தோப்பின் நடுவில் ஓலைக் குடிசையில் இருந்து பின்பு ஒரு ஓடு மேய்ந்த இடத்தில் அமைந்திருந்தாள். தற்போது புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தில் அருள்புரிகிறாள்.
இந்தக் கோயில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.நுழைந்த உடன் உள்ள மஹா மண்டபத்தில் வரையப் பட்டுள்ள அற்புதமான வண்ண ஓவியங்கள் கண் கவர் காட்சியாக உள்ளது. மேலும் நுழைவாயிலில் இருபுறமும் அமைந்துள்ள துவாரபாலகர்கள் சுதை வடிவில் அமைந்திருக்க அடுத்துள்ள கருவறையில் அம்சமாக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள் பத்ரகாளியம்மன்.மேற்க் கைகளில் சங்கும், உடுக்கையும் தாங்கி,கீழ் கைகளில் குங்குமச்சிமிழும்,சூலாயுதமும் தாங்கும் இன்முகப் புன்னகையோடு காட்சி அளிக்கும் அம்மனின் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் தோணும்.தேவியின் முன் சிங்கமும்,பீடமும் அமைக்கப்பட்டுள்ளது.இந்தச் சன்னதியின் பிரகாரத்தில் மதுரைவீரன்,பட்டவன்,பிரசன்ன விநாயகர்,சாம்புவன்,முத்துக்கருப்பன் போன்ற மற்ற கடவுள்களும் அருள்கின்றனர்.மேலும் இங்கு நிறைய நாகர் திருமேனிகளும் நாகம்மா சிலையும் அந்தச் சிலையை ஒட்டி நிறைய பாம்பு புத்தும் இருப்பதாகக் கூறுகின்றனர்.இந்தப் பாம்புகள் அவ்வப்போது பக்தர்களின் பார்வையில் படுவதுண்டாம்.இந்தக் கோயிலை தரிசனம் செய்ய நாக தோஷம் வெகுவாகக் குறையும் என்பது மக்களின் நம்பிக்கை. பலநூறு குடும்பங்களுக்கு குலதெய்வம் இந்த என்றாலும் பல முறை திருவுளச் சீட்டு போட்டுப் பார்த்தும் இந்த அன்னை தன் கோயிலின் மேல் கூரை போட அனுமதி கொடுக்கவில்லை என்பது பலருக்கும் வருத்தம் தரக்கூடிய விஷயமாக உள்ளது.திருச்சியில் உள்ள வெக்காளி அம்மனைப் போலவே இந்த பத்ரகாளியம்மனும் வெயிலோ,மழையோ அதைத் தன் சிரசில் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.
விழாக்கள்:
சித்ரா பௌர்ணமி அன்று ஆலயம் விழாக் கோலம் கொண்டு காணப்படும்.அன்றைய தினம் திருவிளக்கு பூஜை நடைபெறும்.அதில் ஏராளமான பெண்கள் கலந்துகொள்கிறார்கள்.வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் ராகு கால நேரத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை நடைபெறுகிறது. அதிலும் ஆடி மாத வெள்ளிக் கிழமை மிகவும் விசேஷம்.
இந்தப் பிரகாரத்தின் நடுவே பல நூறு ஆண்டுகள் கடந்த இச்சி மரம் உள்ளது. குழந்தை வரம் வேண்டிப் பெண்கள் பிரார்த்தனை செய்து தலவிருட்சமான இந்த மரத்தில் தொட்டில் கட்டி வருகின்றனர்.அவர்களது பிரார்த்தனையை பத்ரகாளி அம்மன் நிறைவேற்றி வருகிறாள்.
அமைந்துள்ள இடம்:
திருச்சியிலிருந்து 6 கி.மீ தொலைவில் அம்மன் நகரில் உள்ளது இந்த பத்ரகாளி அம்மன் ஆலயம்.சத்திரம் அல்லது மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பாய்லர் தொழிற்சாலை செல்லும் பேருந்தில் ஏறி சக்தி நகர் நிறுத்தத்தில் இறங்கி நடந்தே சென்று விடலாம் இந்த பத்ரகாளி அம்மன் ஆலயத்திற்கு.
தரிசன நேரம்:
காலை 7- மதியம் 1 வரை.
மாலை 4 – இரவு 8 வரை.
The post பத்ரகாளியம்மன் கோயிலில் தீரும் நாக தோஷம் appeared first on Swasthiktv-Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.






