நலம் காக்கும் பைரவம்-பைரவ முகூர்த்தம்
24 நிமிடங்கள் கொண்டது ஒரு நாழிகை. இவ்வாறு நான்கு நாழிகைகள் சேர்ந்ததே அதாவது ஒன்றரை மணி நேரமே ஒரு முகூர்த்தம் எனப்படும். இது பொதுவான கணக்கு. மேலும், முகூர்த்தம் என்பது புனிதமான காலம் என்றும் பொருள்படும். இடத்தைப் பொறுத்தும், காரியத்தைப் பொறுத்தும் முகூர்த்தத்தின் கால அளவு மாறுபடும் என்பது உண்மையே. உதாரணமாக, சன்னியாசி என்பவர் ஒரு பசு மாடு பால் கறக்கும் நேர அளவிற்குத்தான் ஒரு வீட்டின் முன்பு பிச்சை யாசிப்பதற்காக நிற்கலாம் என்பது சன்னியாச முகூர்த்தம். கோதூளி முகூர்த்தம் என்பது பசு மாடுகள் காலையில் புல் மேய்வதற்காக செல்லும் நேரமாகும். எனவே இத்தகைய முகூர்த்தங்களுக்கு இத்தனை மணி, நிமிடம் என்ற கால வரையறையை நிர்ணயிக்க முடியாது.
சித்தர்கள் கணக்கில் பிரம்ம முகூர்த்தம் என்பது விடியற் காலையில் மூன்றரை மணி முதல் ஐந்தரை மணி வரைக்கும் உள்ள நேரமாகும். அபிஜித் முகூர்த்தம் என்பது நண்பகல் நேரமாகும். இதுவும் கால தேச மாறுபாடு உடையதே.

இத்தகைய முகூர்த்த நேரத்தின் இடையில்தான் சித்தர்கள் கணக்கிடும் அமிர்த நேரம் என்ற சித்த முகூர்த்தங்கள் அமைகின்றன. சித்தாமிர்த நேரம் ஒரு நிமிடம் மட்டுமே அமையும். அதுபோல பைரவ முகூர்த்தம் என்ற அற்புதமான முகூர்த்த நேரம் உண்டு. சித்தர்களின் கிரந்தங்களில் மட்டுமே காணப்படும்.
சூரிய உதயத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நான்கு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று வழங்கப்படுகின்றது. உதாரணமாக, ஒரு நாள் காலை சூரிய உதயம் 6 மணி 12 நிமிடம் என்று வைத்துக் கொண்டால் சூரிய உதயத்திற்கு முன்னால் உள்ள நான்கு நிமிடங்களும் சூரிய உதயத்திற்குப் பின் உள்ள நான்கு நிமிடங்களும், அதாவது 6 மணி 8 நிமிடத்திலிருந்து 6 மணி 16 நிமிடம் வரை உள்ள எட்டு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று சித்தர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது.

திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற எந்த நற்காரியத்திற்கும் முகூர்த்தம் லக்ன நேரம் குறித்துதான் காரியங்களை நிகழ்த்த வேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால், போதிய ஜோதிட ஞானம் இல்லாதோரும் சூழ்நிலை காரணங்களால் இத்தகைய முகூர்த்த லக்னங்களில் நற்காரியங்களை நிகழ்த்த இயலாதபோது மேற்கூறிய முகூர்த்தங்கள் நற்காரிய சித்தி அளிக்கவல்லதாய் அமைகின்றன. சூன்ய திதி, அசம்பூர்ண நட்சத்திரங்கள், பகை ஹோரைகள் போன்ற பற்பல பஞ்சாங்க தோஷங்களைக் களையக் கூடிய சக்தியை உடையதே அபிஜித் போன்ற விசேஷ முகூர்த்தங்கள் ஆகும்.
இவ்வாறு பைரவ முகூர்த்த நேரத்தில் இயற்ற வேண்டிய வழிபாடுகள் ஏராளமாக உண்டு. அவ்வழிபாடுகள் நாம் காலத்தை முறையாகப் பயன்படுத்தாத தோஷங்களுக்கு ஒரளவு பரிகாரமாக அமைகின்றன. சித்தர்கள் அருளிய பைரவ முகூர்த்த நேரத்தைக் குறிப்பதே பைரவ மூர்த்திகளின் வாகனமாய் எழுந்தருளியுள்ள நாய்களின் வால் பகுதியாகும். எந்த அளவிற்கு பைரவ மூர்த்திகளின் வாகனங்களின் வால் பகுதியைத் தியானித்து வழிபாடுகளை மேற்கொள்கிறோமோ அந்த அளவிற்கு பைரவ முகூர்த்தத்தைப் பற்றிய ரகசியங்களை நாம் தெரிந்து உணர்ந்து அதை நற்காரிய சித்திக்குப் பயன்படுத்த முடியும்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
Mobile: 9941510000
To Receive Our Daily Devotional News Update on Whatsapp message with Your name to 8124516666
Like us our Facebook page swasthiktv.com
Subscribe in Youtube: https://www.youtube.com/channel/UCGcuIrojwgrYpm5cKdf2bhg
The post நலம் காக்கும் பைரவம்-பைரவ முகூர்த்தம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.





